1. நிலையான கடவுச்சொல் என்றால் என்ன?
நிலையான கடவுச்சொல் என்பது இரண்டாவது கடவுச்சொல் ஆகும், நீங்கள் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழைய பயன்படுத்தும் கடவுச்சொல் அல்லாமல் கூடுதலாக மற்றொரு கடவுச்சொல். உங்கள் மின்னணு-தாக்கல் கடவுச்சொல் மற்றும் நிலையான கடவுச்சொல் இடையே உள்ள வேறுபாடு பின்வருமாறு:
- உங்கள் நிலையான கடவுச்சொல்லை நீங்கள் உருவாக்க வேண்டியதில்லை, இது கணினியால் உருவாக்கப்படும் (நீங்கள் நிலையான கடவுச்சொல்லைப் பயன்படுத்த தேர்வுசெய்தால்).
- நிலையான கடவுச்சொல் விருப்பத் தேர்வாகும், மின்னணு-தாக்கல் கடவுச்சொல் கட்டாயமானது.
- நிலையான கடவுச்சொல் என்பது இரண்டாவது அங்கீகார காரணியாகும், உங்கள் மின்னணு-தாக்கல் கடவுச்சொல் முதன்மையானது.
2. நிலையான கடவுச்சொல்லை உருவாக்குவது எப்படி பயனுள்ளதாக இருக்கும்?
ஆதார் OTP, EVC, இணைய வங்கி, DSC அல்லது QR குறியீடு போன்ற பல்வேறு முறைகள், இரண்டு காரணி அங்கீகாரத்திற்கு நீங்கள் பயன்படுத்துவதற்காக உள்ளன. இந்த முறைகள் பொதுவாக நல்ல இணைய இணைப்பை சார்ந்திருக்கும். அலைபேசி வலையமைப்பு (மொபைல் நெட்வொர்க்) குறைவாக இருக்கும்போதும் உங்கள் அலைபேசி எண்ணில் ஒரு OTP ஐ பெற முடியாத போதும் நிலையான கடவுச்சொற்கள் பயனுள்ளதாக இருக்கும்.
3. எனது நிலையான கடவுச்சொல்லை நானே உருவாக்கிக் கொள்ள வேண்டுமா?
இல்லை. நிலையான கடவுச்சொற்கள் கணினியால் உருவாக்கப்பட்டவை, மேலும் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்ட உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் மூலம் அவை அனுப்பப்படும்.
4. நிலையான கடவுச்சொல்லை உருவாக்குவதற்கான விதிகள் என்னென்ன?
- ஒரே நேரத்தில் மொத்தம் 10 நிலையான கடவுச்சொற்கள் உருவாக்கப்பட்டு மின்னணு-தாக்கலில் பதிவு செய்யப்பட்ட உங்கள் மின்னஞ்சல் IDக்கு அனுப்பப்படும்.
- உருவாக்கப்பட்ட 10 கடவுச்சொற்களில், ஒரு உள்நுழைவுக்கு ஒரு கடவுச்சொல்லை மட்டுமே பயன்படுத்த முடியும், அதை மீண்டும் பயன்படுத்த முடியாது. நீங்கள் உருவாக்கிய நிலையான கடவுச்சொல் பட்டியலில் இருந்து மற்றொன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- உங்களுக்கு அனுப்பப்படும் நிலையான கடவுச்சொற்கள் உருவாக்கப்பட்ட தேதியிலிருந்து 30 நாட்களுக்கு செயல்பாட்டில் இருக்கும்.
- உங்கள் நிலையான கடவுச்சொல்லை நீங்கள் உருவாக்கியதும், அனைத்து 10 கடவுச்சொற்களும் பயன்படுத்தப்படும் வரை அல்லது 30 நாட்கள் முடியும் வரை, இவற்றில் எது முதலில் வருகிறதோ அதுவரை நிலையான கடவுச்சொல்லை உருவாக்கும் பட்டன் முடக்கப்படும். 10 கடவுச்சொற்கள் அல்லது 30 நாட்கள், இந்த இரண்டிலொன்று காலாவதியாகும் போது, நீங்கள் மீண்டும் நிலையான கடவுச்சொற்களை உருவாக்க வேண்டும்.
5. நான் நிலையான கடவுச்சொற்களை பலமுறை உருவாக்க முடியுமா, அல்லது இது ஒரு முறை மட்டும் செயல்படுத்தக் கூடிய செயல்பாடா?
ஆம், நீங்கள் பல முறை நிலையான கடவுச்சொற்களை உருவாக்கலாம், ஆனால் அனைத்து கடவுச்சொற்களும் காலாவதியான பிறகு (உருவாக்கப்பட்ட 30 நாட்களுக்கு பின்) அல்லது 10 நிலையான கடவுச்சொற்களை பயன்படுத்திய பிறகு மட்டுமே நீங்கள் உருவாக்கலாம்.
6. எனக்கு ஏற்கனவே ஒரு மின்னணு-தாக்கல் கடவுச்சொல் உள்ளது. எனக்கு ஏன் நிலையான கடவுச்சொல் தேவை?
மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பிற்காக நிலையான கடவுச்சொல் தேவை. மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழைவது இரண்டு-காரணி அங்கீகாரத்தை உள்ளடக்கியது. இரண்டு-காரணி அங்கீகாரம் என்பது கூடுதல் பாதுகாப்பு அடுக்குடன் கூடிய ஒரு முறையாகும் (பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லுடன் கூடுதலாக ஒரு கடவுச்சொல்). மின்னணு-தாக்கல் பயனர் ID மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்ட பிறகு, இரண்டு-காரணி அங்கீகார முறைகளில் நிலையான கடவுச்சொல்லும் ஒன்றாகும்.
7. மின்னணு-தாக்கலுக்கான நிலையான கடவுச்சொல்லில் உள்ளடங்கியிருப்பது என்ன?
மின்னணு-தாக்கல் நிலையான கடவுச்சொல் என்பது சீரற்ற முறையில் உருவாக்கப்பட்ட எண் குறியீடாகும்.
8. எனது பயன்படுத்தப்படாத நிலையான கடவுச்சொற்களின் நிலையை நான் அறிவது எப்படி?
உங்கள் மின்னணு-தாக்கல் முகப்புப் பலகையின் இடது பக்க பட்டியலிலிருந்து, "நிலையான கடவுச்சொல்" என்பதைக் கிளிக் செய்யவும். கடந்த 30 நாட்களில் நீங்கள் ஏதேனும் நிலையான கடவுச்சொற்களை உருவாக்கியுள்ளீர்களா என்பதையும், மேலும், நீங்கள் 10 நிலையான கடவுச்சொற்களையும் பயன்படுத்திவிட்டீர்களா என்பதையும் கணினி சரிபார்க்கிறது. உங்களிடம் பயன்படுத்தப்படாத நிலையான கடவுச்சொற்கள் ஏதேனும் இருந்தால், எஞ்சியிருக்கும் 30 நாட்களுக்கு நீங்கள் எத்தனை கடவுச்சொற்களை வைத்திருக்கிறீர்கள் என்பதைக் குறிப்பிடும் ஒரு செய்தி தோன்றும். "நிலையான கடவுச்சொல்லை மீண்டும் அனுப்பவும்" என்பதைக் கிளிக் செய்தவுடன், உங்கள் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ID இல் பயன்படுத்தப்படாத நிலையான கடவுச்சொற்களின் பட்டியலை மின்னஞ்சல் மூலம் பெறுவீர்கள்.
9. நிலையான கடவுச்சொல்லை நான் எங்கு உள்ளிட வேண்டும்?
நிலையான கடவுச்சொல்லைப் பயன்படுத்த, நீங்கள் அவற்றை முன்பே உருவாக்கியிருக்க வேண்டும். பின்வரும் சந்தர்ப்பங்களில் நீங்கள் நிலையான கடவுச்சொற்களை மீண்டும் உருவாக்க வேண்டும்:
- நீங்கள் முன்னர் உருவாக்கிய 10 கடவுச்சொற்களும் பயன்படுத்தப்பட்டால், அல்லது
- நீங்கள் கடைசியாக நிலையான கடவுச்சொற்களை உருவாக்கி 30 நாட்கள் கடந்துவிட்டால் (நீங்கள் 10 ஐயும் பயன்படுத்தாவிட்டாலும் கூட)
நிலையான கடவுச்சொற்களைப் பயன்படுத்துவதற்கான செயல்முறை பின்வருமாறு:
- மின்னணு-தாக்கல் முகப்புப் பக்கத்திற்குச் சென்று, உங்கள் மின்னணு-தாக்கல் பயனர் ID மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
- இது நீங்கள் தான் என்று சரிபார்க்கவும் பக்கத்தில், மற்றொரு முறையை முயற்சி செய்யவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
- அடுத்த பக்கத்தில், நிலையான கடவுச்சொல் என்பதைக் கிளிக் செய்த பின் தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
- நிலையான கடவுச்சொல் பக்கத்தில், உரைப்பெட்டியில் உங்கள் செல்லுபடியாகும் நிலையான கடவுச்சொல்லை உள்ளிட்டு, உள்நுழையவும்.
10. ஒரு குறிப்பிட்ட நிலையான கடவுச்சொல் முன்பே பயன்படுத்தப்பட்டிருப்பதை நான் அறிவது எப்படி?
நீங்கள் பயன்படுத்திய கடவுச்சொற்களை நீங்கள் கைமுறையாக கண்காணிக்கலாம், அல்லது உங்கள் முகப்புப் பலகையில் > நிலையான கடவுச்சொல் தாவலுக்குச் செல்லவும் >நிலையான கடவுச்சொல்லை மீண்டும் அனுப்பவும் என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் மின்னணு தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ID இல் பயன்படுத்தப்படாத நிலையான கடவுச்சொற்களின் பட்டியலை ஒரு மின்னஞ்சல் மூலம் நீங்கள் பெறுவீர்கள்.
11. நிலையான கடவுச்சொற்களைப் பயன்படுத்துவது கட்டாயமா?
இல்லை. ஆதார் OTP, EVC, இணைய வங்கி, DSC, அல்லது QR குறியீடு போன்ற பிற முறைகளைத் தேர்வு செய்து உங்கள் உள்நுழைவை நீங்கள் பாதுகாக்கலாம். நீங்கள் குறைந்த அல்லது அலைபேசி இணைய இணைப்பு இல்லாத பகுதியில் இருந்தால் நிலையான கடவுச்சொல் உதவியாக இருக்கும், அங்கு உங்கள் அலைபேசியில் OTP/EVC பெறுவது கடினமாக இருக்கலாம்.