புதிய சட்டத்தின் நோக்கம் மற்றும் வரம்பு

Frequently Asked Questions

புதிய சட்டத்தின் நோக்கம் மற்றும் வரம்புகள் குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. 1961-ஆம் வருமான வரிச் சட்டத்திற்கு, மாற்றாக 2025-ஆம் வருமான வரிச் சட்டத்தை, அறிமுகப்படுத்துவதன் முக்கிய நோக்கம்

வருமான வரிச் சட்டம், 2025 ஆனது நெறிப்படுத்தப்பட்ட, எளிமையான, மற்றும் நவீன வரி விதிமுறைகளை வழங்குவதற்காக இயற்றப்பட்டுள்ள இது வரி செலுத்துவோரின் இணக்கச் சுமையைக் குறைப்பதுடன், ஒருங்கிணைந்த விதிகள் மற்றும் தெளிவான வரையறைகளைக் கொண்டுள்ளது. கடந்த ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக, 1961-ஆம் வருமான வரிச் சட்டம் எண்ணற்ற திருத்தங்கள், நிபந்தனைகள் மற்றும் விளக்கங்களைக் குவித்து வைத்திருந்ததால், அது சிக்கலானதாகவும் புரிந்துகொள்வதற்குக் கடினமாகவும் மாறியிருந்தது. இந்தப் புதிய சட்டம் அதே வரிக் கொள்கையை மிகவும் தர்க்கரீதியான, எளிதில் அணுகக்கூடிய மற்றும் படிப்பவருக்கு உகந்த வடிவத்தில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இச்சட்டம் வரி செலுத்துதலை எளிமையாக்குவதன் மூலமும், தொழில் செய்வதை எளிதாக்குவதன் மூலமும், இந்திய வரி முறையைச் சமகால உலகளாவிய தரநிலைகளுக்கு ஏற்பச் சீரமைப்பதன் மூலமும் வரி செலுத்துவோரை மையமாகக் கொண்ட அணுகுமுறையை மேம்படுத்துகிறது.

2. வருமான வரிச் சட்டம், 2025 ஆனது 1961-ஆவது வருமான வரிச் சட்டத்தை, முழுமையாக மாற்றியமைக்கிறதா?

ஆம். 1961-ஆம் சட்டம் 01.04.2026 அன்று ரத்து செய்யப்படுகிறது. எனினும், நிலுவையிலுள்ள விவகாரங்களில் எழும் இடையூறுகளைத் தவிர்ப்பதற்கும் சுமூகமான மாற்றத்தை உறுதிசெய்வதற்கும் பழைய சட்டத்தின்கீழான நடவடிக்கைகளைத் தொடர்வது குறித்துச் சில தற்காலிகமான விதிகள் குறிப்பிடுகின்றன.

3. வருமான வரிச் சட்டம் 2025 புதிய வரிகளை அறிமுகப்படுத்துகிறதா அல்லது வரிச் சுமையை அதிகரிக்கிறதா?

இல்லை. வருமான வரிச் சட்டம், 2025 புதிய வரி எதையும் விதிக்கவில்லை. பழைய சட்டத்திற்குப் பதிலாகப் புதிய சட்டத்தைக் கொண்டு வருவதன் பின்னணியில் உள்ள நோக்கம்:

. சட்டப்பூர்வமாக மொழியை எளிமைப்படுத்துதல்

. அமைப்புசார் தெளிவை மேம்படுத்துதல்

. விளக்கவுரை சார்ந்த தகராறுகளைக் குறைத்துக்கொள்ளுதல்

. சட்டவரைவு நடையினை நவீன சட்டமியற்றல் தரநிலைகளுக்கு ஏற்ப அமைத்தல்

. தானாக முன்வந்து வரி செலுத்துதலை மேம்படுத்துதல்

இச்சீர்திருத்தமானது, வரிசெலுத்துபவர்கள் மீதான நிதிப் பொறுப்பையோ அல்லது விதிமுறை இணக்கப் பாரத்தையோ அதிகரிப்பதைக் குறிக்கோளாகக் கொள்ளாமல் வரிச்சட்டத்தை முன்கணிக்கத்தக்கதாகவும், வெளிப்படைத்தன்மை உடையதாகவும் மற்றும் எளிய முறையில் வரி இணக்கம் செய்யத்தக்கதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

4. ஒரு சிறு வரிசெலுத்துபவர் என்ற முறையில், இந்த மாற்றம் எனக்கு எவ்வாறு உதவுகிறது?

இதன் முக்கிய மாற்றங்களில் ஒன்று வாசிக்கும் தன்மையும் மற்றும் புரிந்து கொள்வதற்குமான எளிமையுமாகும். 1961-ஆம் சட்டத்தின் கீழ், அதன் அடுக்கு வடிவ சட்ட வரைவு காரணமாகச் சட்ட இணக்க நடைமுறைகளுக்குப் பெரும்பாலும் நிபுணர்களின் விளக்கம் தேவைப்பட்டது. 2025-ஆம் சட்டம் இலக்காகக் கொண்டிருப்பது:

. எளிமையான மொழிநடையைப் பயன்படுத்தவும்

. அதிகப்படியான குறுக்குக் குறிப்புகளைக் குறைத்துக்கொள்ளுதல்

. சிதறிக்கிடக்கும் விதிகளை ஒருங்கிணைத்தல்

. டிஜிட்டல் ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல்

சட்ட இணக்கச் சிக்கல்களையும் சிக்கலான விளக்கங்களைச் சார்ந்திருக்கும் நிலையையும் குறைப்பதே இதன் நீண்டகால நோக்கமாகும்.

5. புதிய சட்டத்தில் சட்ட விதிகளின் அளவும் அதன் சிக்கல் தன்மையும் எவ்வாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளன?

1961-ஆம் சட்டத்தின் 819 பிரிவுகள் மற்றும் 14 அட்டவணைகளுடன் ஒப்பிடுகையில் வருமான வரிச் சட்டம் 2025-இல் 536 பிரிவுகளும் 16 அட்டவணைகளும் மட்டுமே இடம் பெற்றுள்ளன. புதிய சட்டத்தில், பின்வரும் காரணங்களால் ஒட்டுமொத்தச் சிக்கல் தன்மை குறைக்கப்பட்டுள்ளது:

(i) பிரிவுகளின் முதன்மை உரைப்பகுதியிலேயே விளக்கங்களும் வரம்பு நிபந்தனைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன;

(ii) நீளமான விளக்க உரை விதிகளுக்குப் பதிலாக அட்டவணைகளும் சூத்திரங்களும் இடம்பெற்றுள்ளன;

(iii) பலனற்ற மற்றும் வழக்கற்றுப் போய்விட்ட விதிகள் நீக்கப்பட்டுள்ளன; மற்றும்

(iv) குறுக்குக் குறிப்புகள் மிகவும் தெளிவாகவும் நேரடியாகவும் அமைந்துள்ளன. இதேபோல், வருமான வரி விதிகளானது 511 விதிகளிலிருந்து 333 விதிகளாகவும், 399 படிவங்களிலிருந்து 190 படிவங்களாகவும் குறைக்கப்பட்டுள்ளன.

6. வருமான வரிச் சட்டம் 2025-இல், அத்தியாயங்களின் கட்டமைப்பு மறுசீரமைக்கப்பட்டுள்ளதா?

ஆம்.வருமான வரிச் சட்டம், 2025 பல தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் காரணமாகத் துண்டு துண்டான கட்டமைப்பைக் கொண்டிருந்த வருமான வரிச் சட்டம், 1961-உடன் ஒப்பிடும்போது, அத்தியாயங்களின் கட்டமைப்பை மாற்றி அமைத்துள்ளது. இது சட்ட விதிகளையும் நிபந்தனைகளையும் மிகவும் தர்க்கரீதியான வரிசையில் மறுவகைப்படுத்தியும் மொழியை எளிமைப்படுத்தியும் நிபந்தனை வரம்புகள் மற்றும் விளக்கங்களை முதன்மை உரையிலேயே ஒருங்கிணைத்தும் உருவாக்கியுள்ளது. வருமான வரிச் சட்டம், 1961 சிதறிய அமைப்பைக் கொண்டிருந்த வேளையில், வருமான வரிச் சட்டம், 2025 மிகவும் தெளிவான மற்றும் ஒத்திசைவான வடிவமைப்பை வழங்குகிறது.

7. 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம் நீக்கப்பட்டு, 01.04.2026 அன்று புதிய வருமான வரிச் சட்டம் அமலுக்கு வருவதால், பழைய சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட அனைத்தும் செல்லாததாகிவிடுமா?

இல்லை. 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம் நீக்கப்பட்டதானது, ஏப்ரல் 1, 2026-க்கு முந்தைய வரி ஆண்டுகளுக்குத் தொடர்புடைய எதையும் பாதிக்காது. எடுத்துக்காட்டாக, ஒரு வரி செலுத்துவோரின் 2023-24 மதிப்பீட்டு ஆண்டிற்கான வரி மதிப்பீடு பழைய சட்டத்தின் கீழ் ஏற்கனவே நிறைவடைந்திருந்தால், புதிய சட்டம் அமலுக்கு வந்த பிறகும் அந்த மதிப்பீடு தொடர்ந்து செல்லுபடியாகும். இதேபோல், முந்தைய ஆண்டுகளுக்குத் தொடர்புடைய நிலுவையில் உள்ள நடவடிக்கைகள் அனைத்தும் அதற்குரிய மாற்று ஏற்பாடு விதிகளின்படி தொடர்ந்து நடத்தப்படும்.

8. வருமான வரிச் சட்டம், 2025-இல் 'வருமான வரி விதிப்பதற்கான அடிப்படை' என்பதில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா?

புதிய வருமான வரிச் சட்டம், 2025-இல் வரி விதிப்புக்கான பிரிவு எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின்படி, ஒரு நபரின் 'முந்தைய ஆண்டின்' 'மொத்த வருமானத்தின்' மீதே வருமான வரி விதிக்கப்படுகிறது. மேலும், ஏதேனும் ஒரு மத்திய சட்டத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விகிதம் அல்லது விகிதங்களின்படியும் 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டும் இணங்கியும் எந்தவொரு 'மதிப்பீட்டு ஆண்டிற்கும்' வருமான வரி விதிக்கப்படுகிறது. மறுபுறம், வருமான வரிச் சட்டம், 2025-இல் 'முந்தைய ஆண்டு' என்ற சொல்லிற்குப் பதிலாக, 'வரி ஆண்டு' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 'மதிப்பீட்டு ஆண்டு' என்ற சொல்லின் பயன்பாடு முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது, ஒரு நபரின் 'வரி ஆண்டின்' 'மொத்த வருமானத்தின்' மீதான வருமான வரிவிதிப்பானது, அந்த வரி ஆண்டிற்காக ஏதேனும் ஒரு மத்திய சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட விகிதம் அல்லது விகிதங்களின்படியும், வருமான வரிச் சட்டம், 2025-இன் விதிகளுக்கு உட்பட்டும் இணங்கியும் விதிக்கப்படுகிறது.

9."வரி ஆண்டு" என்பதன் கருத்துரு என்ன? மேலும், "மதிப்பீட்டு ஆண்டு" (’AY’) என்ற கருத்துரு நீக்கப்பட்டுள்ள சூழலில், இனி வருமானம் எவ்வாறு கணக்கிடப்பட்டு வரி விதிக்கப்படும்?

ஒரு 'வரி ஆண்டு' என்பது ஒரு நிதியாண்டில் அடங்கியுள்ள பன்னிரண்டு மாத காலப் பகுதியாகும். இது 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தில் பயன்படுத்தப்பட்ட 'முந்தைய ஆண்டு' என்ற சொல்லிற்கு மாற்றாக அமைகிறது. இந்த ”வரி ஆண்டு” என்ற கருத்துரு 01 ஏப்ரல் 2026 முதல், அதாவது 2026-27 நிதியாண்டு மற்றும் அதற்குப் பிந்தைய காலங்களில் ஈட்டப்படும் வருமானத்திற்குப் பொருந்தும். இது வருமான வரிச் சட்டம், 2025-இன் கீழ் வரி ஆண்டு 2026-27 என்று குறிப்பிடப்படும். எளிமையாகச் சொன்னால், புதிய சட்டத்தின் கீழ் உள்ள வரி ஆண்டு என்ற கருத்துரு, 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் கீழ் உள்ள முந்தைய ஆண்டு என்ற கருத்துருவிற்கு இணையானதாகும். இதன்படி, 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் கீழ் முந்தைய ஆண்டின் வருமானம் அந்த முந்தைய ஆண்டு முடிந்த பிறகு எவ்வாறு மதிப்பிடப்படுகிறதோ, அதே போன்ற தற்போதைய நடைமுறையைப் போலவே, புதிய சட்டத்திலும் ஒரு வரி ஆண்டின் வருமானம் அந்த வரி ஆண்டு முடிந்த பிறகே தொடர்ந்து மதிப்பிடப்படும். 'முந்தைய ஆண்டு' மற்றும் 'மதிப்பீட்டு ஆண்டு' ஆகிய சொற்களின் பயன்பாடு இரண்டு வெவ்வேறான நிதியாண்டுகளைக் குறித்ததால் வரி செலுத்துவோர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வந்தது. 'வரி ஆண்டு' என்பதை முந்தைய ஆண்டு/நிதியாண்டுடன் இவ்வாறு ஒரே நேர்க்கோட்டில் கொண்டு வந்திருப்பது, 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் கீழ் இருந்த இரட்டை ஆண்டு குறிப்பீடுகளால் ஏற்பட்ட குழப்பத்தை முழுமையாக நீக்குகிறது.

10. ஒரு 'வரி ஆண்டு' என்பது ஒரு 'நிதியாண்டை' விடக் குறைவான காலப் பகுதியாக இருக்க முடியுமா?

ஆம். ஒரு நிதியாண்டின் இடையில் ஒரு புதிய வணிகம் தொடங்கப்படும் போதோ அல்லது ஒரு புதிய வருமான ஆதாரம் உருவாகும் போதோ இது நிகழும். இத்தகைய சூழ்நிலைகளில், அந்த வரி ஆண்டானது வணிகம் தொடங்கப்பட்ட தேதியிலிருந்தோ அல்லது வருமான ஆதாரம் உருவான தேதியிலிருந்தோ தொடங்கி, அந்த நிதியாண்டின் இறுதி நாளில் முடிவடையும். எடுத்துக்காட்டாக, ஒரு வணிகமானது 1 டிசம்பர் 2026 அன்று தொடங்கப்பட்டால், அந்த வணிகத்திற்கான வரி ஆண்டு 1 டிசம்பர் 2026 முதல் 31 மார்ச் 2027 வரையிலான கால அளவைக் கொண்டதாக இருக்கும்.

11. வருமான வரிச் சட்டம், 2025-இல், 2025 ஏப்ரல் 1 அன்றோ அல்லது அதற்கு முன்போ தொடங்கும் ஒரு "வரி ஆண்டு" எனக் குறிப்பிடப்பட்டிருந்தால், அதை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும்?

வருமான வரிச் சட்டம், 2025-இன் பிரிவு 536(3)-ஆனது, ஒரு வரி ஆண்டு குறித்த எந்தவொரு குறிப்பீடும், பழைய சட்டத்தின் கீழ் உள்ள அதற்குரிய 'முந்தைய ஆண்டு' என்ற குறிப்பீடாகவே படிக்கப்பட வேண்டும் என்று வழங்குகிறது. இந்த விதியானது ஒரு மாற்று ஏற்பாடு விதியாகும்; இது அந்த ஆண்டுகளுக்குப் பொருந்தக்கூடிய வரி விதிப்பு முறையை மாற்றியமைக்காது. எடுத்துக்காட்டு: புதிய சட்டம் 'வரி ஆண்டு 2024-25' என்று குறிப்பிட்டால், அது பழைய சட்டத்தின் கீழ் உள்ள 'முந்தைய ஆண்டு 2024-25'-க்குச் சமமானதாகும். இது அதன் பங்கிற்கு 'மதிப்பீட்டு ஆண்டு 2025-26'-க்குச் சமமானதாக அமையும்.

12. 'வரி ஆண்டு' என்ற கருத்துரு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், வணிகங்கள் தங்களது கணக்குக் காலங்களை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் ஏதேனும் உள்ளதா?

இல்லை, வரி ஆண்டானது நிதியாண்டுடன் ஒரே நேர்க்கோட்டில் சீரமைக்கப்பட்டுள்ளதால், வணிகங்களோ அல்லது பிற வரி செலுத்துவோரோ தங்களது கணக்கு ஆண்டையோ அல்லது நிதிநிலை அறிக்கைகளையோ மாற்றியமைக்க வேண்டிய அவசியம் இல்லை.

13. நிரந்தர கணக்கு எண் (PAN), வரி பிடித்தம் கணக்கு எண் (TAN), முகமற்ற நடைமுறைகள், மற்றும் பிற., தற்போதைய நிர்வாகக் கட்டமைப்புகள் வருமான வரிச் சட்டம் 2025-ன் கீழ் தொடருமா?

ஆம், தற்போதுள்ள நிரந்தர கணக்கு எண், வரி பிடித்தம் கணக்கு எண் (TAN), முகமற்ற வரி விதிப்பு, முகமற்ற மேல்முறையீட்டுக் கட்டமைப்பு மற்றும் பிற., வருமான வரிச் சட்டம் 2025-ன் கீழ் தொடரும்.

14. வருமான வரிச் சட்டம் 2025, வருமான வரிச் சட்டம் 1961-லிருந்து எவ்வாறு தொடர்ச்சியை உறுதி செய்கிறது மற்றும் தடையற்ற மாற்றத்தை ஏற்படுத்துகிறது?

வரிச் சட்டம் என்பது வருடாந்திர எல்லைகளுக்குள் மட்டும் கண்டிப்பாகச் செயல்படுவதில்லை. TDS, TCS, முன்கூட்டியே வரி செலுத்துதல் மற்றும் பிற இணக்கங்கள் நிதியாண்டிற்குள் நிகழ்ந்தாலும் பிற நடைமுறைகளான — கணக்குத் தாக்கல், வரி விதிப்புகள், மறு வரி விதிப்புகள், மேல்முறையீடுகள், அபராதங்கள் மற்றும் வரித் திரும்பப்பெறுதல்கள் — பெரும்பாலும் அந்த ஆண்டைத் தாண்டியும் சில குறிப்பிட்ட வழக்குகளில் பல ஆண்டுகள் வரையிலும் நீடிக்கின்றன. எனவே, ஒரு புதிய வரிச் சட்டம் அமலுக்கு வரும்போது, பழைய மற்றும் புதிய சட்டங்கள் ஒரு தற்காலிக இடைக்காலத்திற்கு இணைந்து செயல்பட வேண்டும். வருமான வரிச் சட்டம் 2025 இந்த நடைமுறை யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு, பிரிவு 536-ன் ரத்து மற்றும் சேமிப்பு விதி மூலம் இந்த தடையற்ற மாற்றத்தைக் கையாள்கிறது. வருமான வரிச் சட்டம் 2025-ன் பிரிவு 536: • பல்வேறு இடைக்காலச் சூழ்நிலைகளைக் கையாளும் 22 உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது. • முந்தைய ஆண்டுகளுக்குப் பழைய வரி நடைமுறையே தொடர்ந்து பொருந்துவதை உறுதி செய்கிறது. • இரண்டு சட்டங்களுக்கும் இடையே உள்ள கலைச்சொற்களை ஒத்திசைக்கிறது. • ஏற்கனவே நிலைநாட்டப்பட்ட நடைமுறைகளை நிலைகுலையச் செய்யாமல், சட்டத்தை நவீனமயமாக்க அனுமதிக்கிறது.

15.பிரிவு 536-ல் பட்டியலிடப்பட்டுள்ள குறிப்பிட்ட சேமிப்பு விதிகளின் கீழ் நேரடியாக வராத சில சூழ்நிலைகள் அல்லது நிலைமைகள் ஏற்படலாம் அல்லவா? அத்தகைய வழக்குகளைக் கையாளும்போது எதிர்பாராத சட்ட இடைவெளிகள் ஏதும் ஏற்படாமல் இருப்பதை இந்தச் சட்டம் எவ்வாறு உறுதி செய்கிறது?

வருமான வரிச் சட்டம் 2025-ன் பிரிவு 536-ன் உட்பிரிவு (2), சாத்தியமான அளவு குறைவான நிச்சயமற்ற தன்மையே இருக்கும் வகையில் பரந்த அளவில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வருமான வரிச் சட்டம் 2025-ன் பிரிவு 536, உட்பிரிவு (2)-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள சூழ்நிலைகளால் நேரடியாக உள்ளடக்கப்படாத, எதிர்பாராத எந்தவொரு சூழ்நிலையையும் கையாளுவதற்காக, 1961 சட்டம் ரத்து செய்யப்படுவதன் விளைவுகள் தொடர்பாக 'பொதுப் பிரிவுகள் சட்டம், 1897'-ன் பிரிவு 6 பொருந்தும் என உட்பிரிவு (4) வழிவகுக்கிறது. இந்த விதியானது, வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ளதைத் தாண்டியும் உரிமைகளையும் கடமைகளையும் நிலைநிறுத்துகிறது. நிலைநாட்டப்பட்ட உரிமைகளையும் கடமைகளையும் பாதுகாக்கும் பரந்த கோட்பாடுகளைப் பயன்படுத்துவதன் மூலம் எதிர்பாராத சூழ்நிலைகளும் உள்ளடக்கப்படுவதை இது உறுதி செய்கிறது.

16. ஒருவருக்குப் பழைய சட்டத்தின் கீழ் ஏதேனும் ஒரு உரிமையோ அல்லது சலுகையோ இருந்திருந்தால், புதிய சட்டம் 01.04.2026 அன்று அமலுக்கு வரும்போது அந்த உரிமை மறைந்துவிடுமா?

இல்லை. பழைய சட்டத்தின் கீழ் உருவான உரிமைகள், சலுகைகள், கடமைகள் அல்லது பொறுப்புகள் தொடர்ந்து நீடிக்கும். எடுத்துக்காட்டாக, புதிய சட்டம் தொடங்குவதற்கு முந்தைய எந்தவொரு வரி ஆண்டிற்கும் பழைய சட்டத்தின் கீழ் ஒரு வரி செலுத்துபவர் வரித் திரும்பப் பெறும் தகுதி பெற்றிருந்தால் புதிய சட்டம் அமலுக்கு வந்த பின்னரும் அவர் அந்த வரித் திரும்பப் பெறும் தகுதியுடையவராகவே நீடிப்பார்.

17. வருமான வரிச் சட்டம் 1961-ன் கீழ் நிலுவையில் உள்ள நடவடிக்கைகள் மற்றும் வழங்கப்பட்ட அறிவிப்புகள், புதிய சட்டம் அமலுக்கு வந்த பிறகு எவ்வாறு கருதப்படும்?

புதிய சட்டத்தின் பிரிவு 536(2)(c), இந்தச் சட்டம் தொடங்கும் தேதியில் நிலுவையில் உள்ள எந்தவொரு நடவடிக்கைக்கும் மற்றும் 2026 ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு முன் தொடங்கும் எந்தவொரு வரி ஆண்டு தொடர்பாக 2026 ஏப்ரல் 1 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ தொடங்கப்படும் எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் (அறிவிப்புகள், வரி விதிப்பு, மறு வரி விதிப்பு, மறு கணக்கீடு, திருத்தம், அபராதம், குறிப்புரை, மறுஆய்வு மற்றும் மேல்முறையீடுகள் உட்பட) ரத்து செய்யப்பட்ட வருமான வரிச் சட்டத்தின் விதிகள் தொடர்ந்து பொருந்தும் என்றும் அத்தகைய நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்ட வருமான வரிச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறையின்படியே மேற்கொள்ளப்படும் என்றும் வழிவகுக்கிறது. எடுத்துக்காட்டாக, புதிய சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு, 2024-25 வரி விதிப்பு ஆண்டிற்கான ஒரு வரி செலுத்துபவரின் வருமான வரி விதிப்பை வரி விதிப்பு அதிகாரி தொடங்கியிருந்தால் அந்த முழுமையான வரி விதிப்பு மற்றும் பிற நடவடிக்கைகள் பழைய சட்டத்தின் விதிகளின் கீழ் முடிவடையும்.

18.புதிய வருமான வரிச் சட்டத்தின் கீழ், பழைய ஒப்புதல்கள், பதிவுகள் மற்றும் அங்கீகாரங்கள் இன்னும் செல்லுபடியாகுமா?

ஆம், இத்தகைய ஒப்புதல்கள் புதிய சட்டத்தின் விதிகளுக்கு முரணாக இல்லாத பட்சத்தில், அவை புதிய சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டவை போலவே கருதப்படும். எடுத்துக்காட்டாக, பழைய சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட ஓர் அறக்கட்டளை புதிய சட்டத்தின் விதிகளுடன் ஏதேனும் முரண்பாடு இருந்தாலொழிய, புதிய சட்டத்தின் தொடர்புடைய விதியின் கீழ் அங்கீகரிக்கப்பட்டதாகவே கருதப்படும்.

19. புதிய சட்டம் அமலுக்கு வந்த பிறகும், வரித் துறையால் வெளியிடப்பட்ட பழைய சுற்றறிக்கைகள், அறிவுறுத்தல்கள் மற்றும் அறிவிப்புகள் தொடர்ந்து நீடிக்குமா?

ஆம். வருமான வரிச் சட்டம், 2025-இன் பிரிவு 536(2)(j)-இன் விதிகளின்படி, பழைய சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள், அறிவிப்புகள், அறிவுறுத்தல்கள், அனுமதிகள் மற்றும் பிறவும் புதிய சட்டத்துடன் முரண்படாதவரை தொடர்ந்து செல்லுபடியாகும். எடுத்துக்காட்டு: TDS விதிகள் (பழைய சட்டத்தின் பிரிவு 194C? புதிய சட்டத்தின் பிரிவு 393). பழைய சட்டத்தின் பிரிவு 194C-இன் கீழ் "வேலை" என்ற வார்த்தையைத் தெளிவுபடுத்தும் ஒரு சுற்றறிக்கை, நோக்கம் மாறாமல் இருக்கும் பட்சத்தில் புதிய வருமான வரிச் சட்டம் 2025-இன் பிரிவு 393-க்கும் தொடர்ந்து பொருந்தும்.

20.பழைய சட்டத்தின் கீழ் வரி செலுத்துபவர் மற்றும் வரி அதிகாரிகளுக்கு இடையேயான நேரடித் தொடர்பைக் குறைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட திட்டங்கள் (முகமற்ற வரிமதிப்பீடு/முகமற்ற மேல்முறையீட்டுத் திட்டங்கள் போன்றவை) புதிய சட்டத்தின் கீழும் இன்னும் செல்லுபடியாகுமா?

ஆம். இத்தகைய திட்டங்கள் புதிய சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் உருவாக்கப்பட்டதாகவே கருதப்படும். ஒருவேளை, புதிய சட்டத்தில் அதற்கு இணையான பிரிவு ஏதும் இல்லாத பட்சத்தில், இத்தகைய திட்டங்களை உருவாக்குவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் புதிய சட்டத்தின் பிரிவு 532-இன் கீழ் அவை உருவாக்கப்பட்டதாகக் கருதப்படும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தற்போது நடைமுறையில் உள்ள முகமற்ற வரிமதிப்பீட்டுத் திட்டம் புதிய சட்டத்தின் கீழும் எந்தவொரு தடையுமின்றித் தொடர்ந்து செயல்படும்.

21. பழைய மற்றும் புதிய சட்டங்கள் எவ்வளவு காலத்திற்கு இணையாகச் செயல்படும்? நடைமுறையில் வரி செலுத்துபவருக்கு இதன் பொருள் என்ன?

1 ஏப்ரல் 2026 முதல், 1961-ஆம் ஆண்டு சட்டம் ரத்து செய்யப்படும். இருப்பினும், 1 ஏப்ரல் 2026-க்கு முன்னர் தொடங்கும் அனைத்து வரி ஆண்டுகளையும் அதன் விதிகளே தொடர்ந்து நிர்வகிக்கும். அதன்படி: (i) வருமான வரித்துறையின் மின்னணு-தாக்கல் இணைய முகப்பு, பழைய மற்றும் புதிய ஆகிய இரு சட்டங்களின் கீழான வரி இணக்கங்களையும் ஒரே நேரத்தில் மேற்கொள்வதற்கு வசதியாக இருக்கும். (ii) ஜூலை 2026-இல் AY 2026-27 க்கான (பழைய சட்டத்தால் நிர்வகிக்கப்படும் காலத்திற்குரிய) வரித் தாக்கலைச் செய்யும் வரி செலுத்துபவர், பழைய சட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட படிவங்களைப் பயன்படுத்தியே அதைச் செய்வார்கள். அதே நேரத்தில், ஜூன் 2026 முதல் தொடங்கும் வரி ஆண்டு 2026-27 க்கான முன்பண வரிச் செலுத்தல்கள் புதிய சட்டத்தின்படி மேற்கொள்ளப்படும். (iii) முந்தைய ஆண்டுகளுக்குரிய அனைத்து வரி மதிப்பீடுகள், மேல்முறையீடுகள் மற்றும் பிற நடைமுறைகள் அனைத்தும் இறுதித் தீர்வு எட்டப்படும் வரை பழைய சட்டத்தின் கீழேயே தொடர்ந்து நடத்தப்படும்.

22. வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 115BAC தனிநபர்கள் மற்றும் HUF-களுக்கு புதிய வரி விதிப்பு முறையை வழங்குகிறது. கூறப்பட்ட அந்த புதிய வரி விதிப்பு முறை, வருமான வரிச் சட்டம், 2025-லும் தொடருமா?

ஆம். வருமான வரிச் சட்டம், 2025-இல் புதிய வரி விதிப்பு முறையானது பிரிவு 202-இன் கீழ் வழங்கப்பட்டுள்ளது. இது தனிநபர்கள், HUF, நபர்களின் கூட்டமைப்பு (கூட்டுறவுச் சங்கம் தவிர்த்து), தனிநபர் குழுமம்-அது பதிவு செய்யப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் மற்றும் பிரிவு 2(77)(g)-இல் குறிப்பிடப்பட்டுள்ள செயற்கையான சட்டப்பூர்வ நபர் ஆகியோருக்குக் கிடைக்கும். புதிய சட்டத்திலும், இந்தப் புதிய வரி விதிப்பு முறையே இயல்புநிலை வரி முறையாகும். மேலும் இந்தப் புதிய வரி விதிப்பு முறையிலிருந்து விலகுவதற்கான வாய்ப்பும் வரி செலுத்துவோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

23. நான் வருமான வரிச் சட்டம், 1961-இன் கீழ் புதிய வரி விதிப்பு முறையைத் தேர்ந்தெடுத்துள்ளேன். புதிய வருமான வரிச் சட்டம், 2025-இன் கீழும் நான் அதை மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டுமா?

இல்லை. புதிய சட்டம் தொடங்குவதற்கு உடனடியாகத் தொட்டு முந்தைய காலம் வரை நடைமுறையில் இருந்த பழைய சட்டத்தின் விதிகளின் கீழ் பயன்படுத்தப்பட்ட ஒரு விருப்பத் தேர்வு, புதிய சட்டத்தின் அதற்குச் சமமான விதியின்கீழ் செய்யப்பட்டதாகவே கருதப்படும்.

24. 'வரி ஆண்டு' என்ற கருத்து அறிமுகப்படுத்தப்படுவதால், வணிகங்களின் கணக்குக் காலங்களை மாற்ற வேண்டிய அவசியம் உள்ளதா?

இல்லை, வரி ஆண்டு என்பது நிதியாண்டுடன் ஒத்துப்போவதால், அதாவது 1 ஏப்ரல் முதல் தொடங்கி 31 மார்ச் அன்று முடிவடையும் ஒரு ஆண்டாக இருப்பதால், வணிகங்கள் அல்லது பிற வரி செலுத்துவோருக்கு கணக்கு ஆண்டிலோ அல்லது நிதிநிலை அறிக்கைகளிலோ எந்த மாற்றமும் தேவையில்லை.

25. புதிய வருமான வரிச் சட்டம், 2025-இல் குடியுரிமை உள்ளவர்களுக்கான உத்தேச வரி விதிப்பு தொடர்பான விதிகளில் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?

வருமான வரிச் சட்டம், 1961-இன் விதிகளின் கீழ், வணிகம் (பிரிவு 44AD), நிபுணத்துவத் தொழில் (பிரிவு 44ADA) மற்றும் சரக்கு வாகனங்களை இயக்குதல், வாடகைக்கு விடுதல் அல்லது குத்தகைக்கு விடுதல் ஆகிய வணிகங்களின் (பிரிவு 44AE) மூலம் வருமானம் ஈட்டும் குடியுரிமை உள்ளவர்களுக்கு எளிமையான வரி விதிப்பு முறை அனுமதிக்கப்படுகிறது. வருமான வரிச் சட்டம், 2025-இல், இந்த உத்தேச வரி விதிப்புத் திட்டங்கள் அனைத்தும் எளிமையான மொழியைக் கையாண்டு, ஒரு அட்டவணை வடிவில் ஒரே பிரிவின் கீழ் (பிரிவு 58) ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

26. பழைய சட்டத்தின் கீழ் ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட வரி விருப்பத்தைத் தேர்ந்தெடுத்திருந்தால் (சிறப்பு வரித் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது போல), அந்தத் தேர்வு புதிய சட்டத்திற்குத் தானாகவே மாற்றப்படுமா?

ஆம். புதிய சட்டத்தின் பிரிவு 536(2)-இன் உட்பிரிவு (f), புதிய சட்டம் தொடங்குவதற்கு முன்பு அமலில் இருந்த பழைய சட்டத்தின் விதியின்கீழ் ஒரு விருப்பம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், அது புதிய சட்டத்தின் அதற்குச் சமமான விதியின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவே கருதப்படும் எனத் திட்டவட்டமாகக் குறிப்பிடுகிறது.

27. புதிய வருமான வரிச் சட்டத்தின் கீழ், பழைய அனுமதிகள், பதிவுகள் மற்றும் அங்கீகாரங்கள் இன்னும் செல்லுபடியாகுமா?

ஆம், அத்தகைய அனுமதிகள் புதிய சட்டத்திற்கு முரணாக இல்லாதபட்சத்தில், அவை புதிய சட்டத்தின் கீழேயே வழங்கப்பட்டதாகக் கருதப்படும். எடுத்துக்காட்டாக, பழைய சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட ஓர் அறக்கட்டளை, புதிய சட்டத்தின் விதிகளுடன் ஏதேனும் முரண்பாடு இருந்தால் ஒழிய, புதிய சட்டத்தின் அதற்கு சமமான விதியின் கீழ் அங்கீகரிக்கப்பட்டதாகவே கருதப்படும்.

28. புதிய சட்டம் அமலுக்கு வந்த பிறகும் வருமான வரித்துறையால் ஏற்கனவே வெளியிடப்பட்ட பழைய சுற்றறிக்கைகள், அறிவுறுத்தல்கள் மற்றும் அறிவிப்புகள் தொடர்ந்து நீடிக்குமா?

ஆம். வருமான வரிச் சட்டம், 2025-இன் பிரிவு 536(2)(j)-இன் விதிகளின்படி, பழைய சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள், அறிவிப்புகள், அறிவுறுத்தல்கள், அனுமதிகள் மற்றும் பிறவும் புதிய சட்டத்தின் விதிகளுக்கு முரணாக இல்லாதபட்சத்தில் தொடர்ந்து நீடிக்கும்.

29.ஒரு மதிப்பீட்டு அலுவலர் 1 ஏப்ரல் 2026 ஆம் தேதிக்குமுன் பிறப்பிக்கப்பட்ட ஒரு மதிப்பீட்டு ஆணையைத் திருத்த விரும்பினால், புதிய சட்டம் அமலுக்கு வந்த பிறகும் பழைய சட்டத்தின் கீழ் அதைச் செய்ய முடியுமா?

ஆம். வருமான வரிச் சட்டம், 1961 ரத்துச் செய்யப்பட்டிருந்த போதிலும் அந்தச் சட்டத்தின் கீழ் வரும் மதிப்பீட்டு ஆண்டுகளுடன் தொடர்புடைய வருமானவரிச் சட்டம் 1961-இன் பிரிவு 154-இன் கீழ் அமைந்த திருத்த நடைமுறைகளை, அதே சட்ட விதிகளின்படியே தொடங்கவும் மற்றும் முடித்து வைக்கவும் முடியும். எடுத்துக்காட்டாக, AY 2023-24-க்கான மதிப்பீட்டு ஆணையில் பதிவேடுகளின்படி வெளிப்படையாகத் தெரியும் ஒரு பிழையானது FY 2027-28-இல் கண்டறியப்பட்டால், மதிப்பீட்டு அலுவலர் பழைய சட்டத்தின் விதிகளின்படி அதைத் திருத்த முடியும்.

30. ஒரு வரிவிதிப்புக்குரியவர் பழைய சட்டத்தின் கீழ் ஒரு குறிப்பிட்ட கணக்கியல் முறை அல்லது தேய்மான முறையைத் தேர்ந்தெடுத்திருந்தால், அந்தத் தேர்வு புதிய சட்டத்தின் கீழும் தானாகவே தொடருமா?

ஆம், புதிய சட்டத்தில் அதற்கிணையான ஒரு பிரிவு இருந்து, அதில் எந்தவொரு முரண்பாடும் இல்லாதபட்சத்தில் முந்தைய தெரிவு புதிய சட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டதாகவே கருதப்படும்.

31. ஏப்ரல் 1, 2026-க்கு முன்னர் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் (சரி செய்தல் அல்லது மறுஆய்வு கோரிக்கைகள் போன்றவை) என்னவாகும்?

உங்கள் விண்ணப்பம் 1 ஏப்ரல் 2026-க்கு முன் தொடங்கும் ஒரு வரி ஆண்டுடன் தொடர்புடையதாக இருந்தால், அது வருமான வரிச் சட்டம், 1961-ன் கீழ் தொடர்ந்து பரிசீலிக்கப்படும். நீங்கள் அதை மீண்டும் தாக்கல் செய்யத் தேவையில்லை.

32. புதிய சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு பழைய சட்டத்தின் பிரிவு 132-ன் கீழ் ஒரு நபர் மீது சோதனை தொடங்கப்பட்டிருந்தால், அதனுடன் தொடர்புடைய பிற நடைமுறைகளுக்கு எந்தச் சட்டம் பொருந்தும்?

அத்தகைய சோதனையுடன் தொடர்புடைய அனைத்து நடைமுறைகளும் புதிய சட்டம் இயற்றப்படாதது போலவே பழைய சட்டத்தின் மூலமாகவே தொடர்ந்து நிர்வகிக்கப்படும். எடுத்துக்காட்டாக, ஜனவரி 2026 மாதத்தில் திரு. A என்பவர் மீது ஒரு சோதனை தொடங்கப்பட்டால் அந்தச் சோதனையுடன் தொடர்புடைய வரி விதிப்புகள் மற்றும் இதர அனைத்து நடைமுறைகளும் பழைய சட்டத்தின் விதிகளின்கீழ் மட்டுமே அமையும்.

33. ஒரு வரி விதிப்புக்குரியவர் பழைய சட்டத்தின் கீழ் ஒரு APA (முன்கூட்டிய விலை நிர்ணய ஒப்பந்தம்)-இல் கையெழுத்திட்டிருந்தால், அது புதிய சட்டத்தின் கீழும் அந்த வரிவிதிப்பிற்குரியவரையும் வருமானவரித்துறையையும் கட்டுப்படுத்துமா?

ஆம். புதிய சட்டத்தின் இணையான விதிகளுக்கு முரணாக இல்லாத வரை அந்த ஒப்பந்தம் தொடர்ந்து பொருந்தும். எடுத்துக்காட்டாக, ABC நிறுவனம் ஒரு குறிப்பிட்ட சர்வதேசப் பரிவர்த்தனைக்காக நிதியாண்டு 2024-25 இல் கையெழுத்திட்ட APA, புதிய சட்டத்திலும் அதே விதிகள் இருக்கும் பட்சத்தில் புதிய சட்டத்தின் கீழான வரி விதிப்பு முறைக்குத் தொடர்ந்து வழிகாட்டியாக அமையும்.

34.பழைய சட்டத்தின் கீழ் உள்ள ஒரு சிக்கல் தொடர்பாக உயர் நீதிமன்றத்திலோ அல்லது உச்ச நீதிமன்றத்திலோ ஒரு வழக்கு நிலுவையில் இருந்தால், அதன் இறுதி முடிவு புதிய சட்டம் அமலுக்கு வந்த பிறகும் வரிப் பொறுப்பை பாதிக்குமா?

ஆம். இறுதித் தீர்ப்பு பழைய சட்டத்தின்படி அந்தப் பழைய காலத்திற்குப் பொருந்தும், அதன் விளைவாகச் செலுத்த வேண்டிய அல்லது திரும்பப் பெற வேண்டிய எந்தவொரு வரியும் அதற்கேற்ப கையாளப்படும். எடுத்துக்காட்டாக, AY 2018-19 க்கான XYZ நிறுவனத்தின் தகராறு FY 2027-28 இல் தீர்க்கப்பட்டாலும் அது பழைய சட்டத்தின் கொள்கைகளைப் பயன்படுத்தியே நடைமுறைப்படுத்தப்படும்.

35. பொதுவான வரி ஏய்ப்பு தடுப்பு விதிகள் ('GAAR') ITA 2025-இன் கீழும் தொடர்ந்து நீடிக்கிறதா?

ஆம், GAAR விதிகள் மாற்றமின்றி அப்படியே தக்கவைக்கப்பட்டுள்ளன. அதற்கான வரம்புகள் ஒப்புதல் வழிமுறைகள் மற்றும் நடைமுறைப் பாதுகாப்புகள் ஆகியவை மாறாமல் தொடர்கின்றன