வெளிநாடுவாழ் இந்தியர்

Frequently Asked Questions

குடியுரிமை இல்லாதவர் தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. வருமானவரிச் சட்டம், 2025-இன் கீழ் தனிநபர்களுக்கான அடிப்படை வசிப்பிடநிலைத் தகுதிச் சோதனையில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா?

தனிநபர்களின் வசிப்பிடநிலைத் தகுதியைத் தீர்மானிப்பதற்கான அடிப்படை நிபந்தனைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வருமானவரிச் சட்டம், 2025-இன் பிரிவு 6-இன் கீழ், ஒரு தனிநபர் அந்த வரி ஆண்டில் 182 நாட்கள் அல்லது அதற்கு மேல் இந்தியாவிலிருந்தாலோ அல்லது அந்த ஆண்டில் 60 நாட்கள் அல்லது அதற்கு மேலாகவும், அதற்கு முந்தைய நான்கு ஆண்டுகளில் 365 நாட்கள் அல்லது அதற்கு மேலாகவும் இந்தியாவிலிருந்தாலோ அவர் தொடர்ந்து வரி விதிப்பிற்குரியவராகவே கருதப்படுவார். இந்த நிபந்தனைகள் வருமானவரிச் சட்டம், 1961-இன் பிரிவு 6(1)-இல் உள்ள அதே நிபந்தனைகள் ஆகும்.

2. வேலைவாய்ப்புக்காக இந்தியாவை விட்டு வெளியேறும் ஓர் இந்தியக் குடிமகன் அல்லது இந்தியக் கப்பலில் பணியாளராகச் செல்லும் ஒரு நபர், 182 நாட்கள் அல்லது அதற்கு மேல் இந்தியாவில் தங்கியிருந்தால் மட்டுமே இந்தியாவில் வசிப்பவராகக் கருதப்படுவார் என்ற பழைய சட்டத்தின் (1961) சிறப்புச் சலுகை, புதிய சட்டத்திலும் தொடர்ந்து பொருந்துமா

ஆம், இந்தச் சிறப்புச் சலுகை எந்த மாற்றமும் இன்றித் தொடர்கிறது. ஓர் இந்தியக் குடிமகன் வேலைவாய்ப்புக்காக இந்தியாவிற்கு வெளியே சென்றாலோ அல்லது இந்தியக் கப்பலில் பணிபுரியும் பணியாளராகச் சென்றாலோ, அந்த வரி ஆண்டில் அவர் இந்தியாவில் 182 நாட்கள் அல்லது அதற்கு மேல் தங்கியிருந்தால் மட்டுமே அவர் இந்தியாவில் வசிப்பவர் என்று கருதப்படுவார். அத்தகைய நிகழ்வுகளில், அந்த வரி ஆண்டில் 60 நாட்கள் தங்கியிருக்க வேண்டும்
மற்றும் அதற்கு முந்தைய நான்கு வரி ஆண்டுகளில் 365 நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனை அவருக்குப் பொருந்தாது.

3. இந்தியாவுக்கு வருகை தரும் இந்தியக் குடிமக்கள் அல்லது இந்திய வம்சாவளியினர் தொடர்பான விதிகளில் புதிய சட்டத்தில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா?

இல்லை. வருமான வரிச் சட்டம், 2025-இன் கீழும் இந்த விதி மாறாமல் அப்படியே உள்ளது. இந்தியாவுக்கு வருகை தரும் ஓர் இந்தியக் குடிமகன் அல்லது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர், அந்த வரி ஆண்டில் மொத்தம் 182 நாட்களுக்கு மேல் இந்தியாவில் இருந்தால் மட்டுமே அவர் 'இந்தியாவில் வசிப்பவர்'எனக் கருதப்படுவார். அந்த வரி ஆண்டில் 15 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்களுக்கு (வெளிநாட்டு ஆதாரங்கள் மூலமான வருமானம் நீங்கலாக), புதிய சட்டத்தின் பிரிவு 6(2)(b)-இன் கீழ் மாற்று நிபந்தனை பொருந்தும். அதில், அதே பிரிவில் உள்ள '60 நாட்கள்' என்பது '120 நாட்கள்' என்றும் அதனுடன் அந்த வரி ஆண்டிற்கு முந்தைய நான்கு ஆண்டுகளில் 365 நாட்கள் அல்லது அதற்கு மேலாக இந்தியாவில் தங்கியிருக்க வேண்டும் என்றும் மாற்றியமைத்துப் படிக்கப்பட வேண்டும்.

4. வசிப்பவராகக் கருதப்படுதல் என்றால் என்ன? வருமானவரிச் சட்டம், 1961-இல் ‘வசிப்பவராகக் கருதப்படுதல்’ விதியில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா?

வருமானவரிச் சட்டம், 1961-இன் பிரிவு 6(1A)-இன் படி, ஓர் இந்தியக் குடிமகனின் மொத்த வருமானம் (வெளிநாட்டு மூலங்களிலிருந்து வரும் வருமானம் தவிர்த்து) ரூபாய் 15 லட்சத்திற்கும் அதிகமாக இருந்து, அவருடைய வசிப்பிடம், தங்குமிடம் அல்லது அது போன்ற இதர காரணங்களால் அவர் வேறு எந்த நாட்டிலும் வரி செலுத்தக் கடமைப்பட்டவர் இல்லை எனில், அவர் இந்தியாவில் வசிப்பவராகக் கருதப்படுவார். இந்த 'வசிப்பவராகக் கருதப்படுதல்' விதி வருமானவரிச் சட்டம், 2025-இலும் தக்கவைக்கப்பட்டுள்ளது. வருமானவரிச் சட்டம், 2025-இன் பிரிவு 6(7) என்பது வருமானவரிச் சட்டம், 1961-இன் பிரிவு 6(1A)-க்கு இணையானதாகும். இந்தச் சூழலில், அவர் இந்தியாவில் தங்கியிருந்த நாட்களின் எண்ணிக்கை கணக்கில் கொள்ளப்பட மாட்டாது.

5. புதிய சட்டத்தின் கீழ் 'சாதாரண வதிவாளர் அல்லாதவர்' (NOR) என்ற கருத்துரு மாற்றப்பட்டுள்ளதா?

NOR-க்கான நிபந்தனைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஒரு தனிநபர், முந்தைய பத்து ஆண்டுகளில் ஒன்பது ஆண்டுகள் இந்தியாவில் வசிப்பவர் அல்லாதவராக இருந்திருந்தாலோ அல்லது முந்தைய ஏழு ஆண்டுகளில் மொத்தம் 729 நாட்கள் அல்லது அதற்குக் குறைவாகவே இந்தியாவில் தங்கியிருந்தாலோ அவர் அந்த வரி ஆண்டில் சாதாரண வசிப்பவர் அல்லாதவராகவே நீடிப்பார். வருமான வரிச் சட்டம், 2025-இன் பிரிவு 6(13)-ஆனது, வருமான வரிச் சட்டம், 1961-இன் பிரிவு 6(6)-ஐப் போன்றதே ஆகும்.

6. வருமான வரிச் சட்டம், 2025-இன் கீழ் ஒரு நிறுவனத்திற்கான வசிப்பிடத் தகுதி சோதனை மாற்றப்பட்டுள்ளதா?

இல்லை, வருமான வரிச் சட்டம், 2025-இன் கீழ் ஒரு நிறுவனத்திற்கான வசிப்பிடத் தகுதிச் சோதனையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வருமான வரிச் சட்டம், 1961 மற்றும் வருமான வரிச் சட்டம், 2025 ஆகிய இரண்டின் கீழும், ஒரு நிறுவனம் இந்திய நிறுவனமாக இருந்தாலோ அல்லது அந்தந்த ஆண்டில் அதன் செயல்திறன்மிக்க மேலாண்மை இடம் (POEM) இந்தியாவில் அமைந்திருந்தாலோ அந்நிறுவனம் இந்தியாவில் வசிப்பதாகக் கருதப்படும்.

7. ஏப்ரல் 1, 2026-க்கு முந்தைய வரி ஆண்டுகளுக்கான வசிப்பிடத் தகுதியை எந்தச் சட்டம் தீர்மானிக்கும்?

ஏப்ரல் 1, 2026-க்கு முன் தொடங்கும் எந்தவொரு வரி ஆண்டிற்கான வசிப்பிடத் தகுதியும் வருமான வரிச் சட்டம், 1961-இன் பிரிவு 6-இன் கீழ் மட்டுமே தொடர்ந்து தீர்மானிக்கப்படும். இதற்கான வரி மதிப்பீடு அல்லது மறுமதிப்பீடு நடப்பது வருமான வரிச் சட்டம், 2025 நடைமுறைக்கு வந்த பிறகு இருந்தாலும் இந்த விதியில் மாற்றமிருக்காது. முந்தைய வரி ஆண்டுகள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் 1961-ஆம் ஆண்டு சட்டத்தின் செல்லுபடியாகும் தன்மையைப் பாதுகாக்கும் காப்பு விதியின் அடிப்படையில் இது அமைகிறது.

8. மதிப்பீட்டு ஆண்டு 2025-26-க்கான மறுமதிப்பீடு ஏப்ரல் 1, 2026-க்குப் பிறகு தொடங்கப்பட்டால், ஒரு நபரின் வரி-வசிப்பிடத் தகுதியைத் தீர்மானிக்க எந்த விதிகள் பொருந்தும்?

மதிப்பீட்டு ஆண்டு (AY) 2025-26-க்கான மறுமதிப்பீட்டு அறிவிக்கை ஏப்ரல் 1, 2026-க்குப் பிறகு வழங்கப்பட்டாலும் வசிப்பிடத் தகுதியானது வருமான வரிச் சட்டம், 1961-இன் பிரிவு 6-இன் கீழ் மட்டுமே கண்டிப்பாகத் தீர்மானிக்கப்பட வேண்டும். ஏனெனில், இதில் சம்பந்தப்பட்ட வரி ஆண்டு ஏப்ரல் 1, 2026-க்கு முன்பே தொடங்குகிறது. புதிய சட்டத்தின் பிரிவு 536, அத்தகைய ஆண்டுகளுக்கான நடவடிக்கைகள் புதிய சட்டம் இயற்றப்படாதது போலவே பழைய சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறுகிறது. எனவே, ஏப்ரல் 1, 2026-க்கு முன் தொடங்கும் எந்தவொரு வரி ஆண்டிற்கும் வரி வசிப்பிடத் தகுதியைத் தீர்மானிப்பதில் வருமான வரிச் சட்டம், 2025 பொருந்தாது.

9. எந்த வரி ஆண்டிலிருந்து வசிப்பிடத் தகுதியானது வருமான வரிச் சட்டம், 2025-இன் கீழ் நிர்வகிக்கப்படும்?

வருமான வரிச் சட்டம், 2025-இன் பிரிவு 6-இன் கீழ் உள்ள வசிப்பிடத் தகுதி தொடர்பான விதிகள், ஏப்ரல் 1, 2026 அன்று அல்லது அதற்குப் பிறகு தொடங்கும் வரி ஆண்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். இத்தகைய ஆண்டுகளுக்கான வசிப்பவர், வசிப்பவர் அல்லாதவர், கருதப்பட்ட வசிப்பவர் மற்றும் சாதாரண வசிப்பவர் அல்லாதவர் ஆகிய நிலைகள் முழுமையாகப் புதிய சட்டத்தின் மூலமே தீர்மானிக்கப்படும். ஒரே வரி ஆண்டிற்கு இரண்டு சட்டங்களின் விதிகளும் ஒரே நேரத்தில் பொருந்தாது. வரி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் தேதியை விட, வரி ஆண்டு தொடங்கும் தேதியே இதற்கான எல்லைக்கோடாக அமைகிறது

10. ஒரு நபர் இந்தியாவில் தங்கியிருக்கும் காலம், இரண்டு சட்டங்களுமே நடைமுறையில் உள்ள காலக்கட்டங்களில் பரவியிருந்தால் அவருடைய வசிப்பிடத் தகுதி எவ்வாறு கணக்கிடப்படும்?

வசிப்பிடத் தகுதியானது ஒவ்வொரு வரி ஆண்டிற்கும் தனித்தனியாக மதிப்பீடு செய்யப்படுகிறது. ஒரு தனிநபர் இந்தியாவில் தங்கியிருக்கும் காலம் 2025-26 மற்றும் 2026-27 ஆகிய நிதியாண்டுகள் இரண்டிலும் நீடித்தால், 2025-26 ஆம் நிதியாண்டிற்கான (AY 2026-27) வரி வசிப்பிடத் தகுதியானது, மார்ச் 31, 2026 வரை அவர் இந்தியாவில் தங்கியிருந்த காலத்தின் அடிப்படையில் வருமான வரிச் சட்டம், 1961-இன் விதிகளின்படி தீர்மானிக்கப்படும்.
2026-27 ஆம் நிதியாண்டிற்கு, வசிப்பிடத் தகுதியானது வருமான வரிச் சட்டம், 2025-இன் விதிகளின் கீழ் தீர்மானிக்கப்படும். மேலும் ஏப்ரல் 1, 2026 முதலான காலக்கட்டத்தில் அவர் தங்கியிருந்த கால அளவு இதற்காகக் கணக்கில் கொள்ளப்படும். இருப்பினும், ”60 நாட்கள் (குறிப்பிட்ட வரி ஆண்டில் தங்கியிருக்கும் காலம்) + 365 நாட்கள் (அதற்கு முந்தைய நான்கு வரி ஆண்டுகளில் தங்கியிருக்கும் காலம்)” என்ற சோதனையைப் பயன்படுத்தும்போது, 2025-26 ஆம் நிதியாண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் அவர் தங்கியிருந்த கால அளவுகளும் பொருந்தக்கூடிய வகையில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

11.பழைய சட்டம் ரத்து செய்யப்பட்டது, 'சாதாரண வசிப்பவர் அல்லாதவர்' தகுதிக்குரிய தொடர்ச்சி நிபந்தனைகளைப் பாதிக்குமா?

இல்லை, ”முந்தைய பத்து ஆண்டுகளில் ஒன்பது ஆண்டுகள்” அல்லது ”முந்தைய ஏழு ஆண்டுகளில் 729 நாட்கள்” போன்ற தொடர்ச்சி சார்ந்த சோதனைகள், அந்த முந்தைய ஆண்டுகள் வருமான வரிச் சட்டம், 1961-இன் கீழ் நிர்வகிக்கப்பட்டிருந்தாலும் அவற்றைத் தொடர்ந்து கணக்கில் எடுத்துக்கொள்ளும். ஏப்ரல் 1, 2026 அன்று அல்லது அதற்குப் பிறகு தொடங்கும் வரி ஆண்டிற்கு வருமான வரிச் சட்டம், 2025-இன் பிரிவு 6-ஐப் பயன்படுத்தும்போது, ரத்து செய்யப்பட்ட பழைய சட்டத்தின்கீழ் வரும் முந்தைய ஆண்டுகளும் அதில் அடங்கும்.

12. பழைய சட்டத்தின் ரத்து விதியுடன்,கருதப்பட்ட வசிப்பிடத் தகுதி எவ்வாறு இணைந்து செயல்படுகிறது?

ஏப்ரல் 1, 2026-க்கு முந்தைய வரி ஆண்டுகளுக்கு பிற நாடுகளில் வரி செலுத்த வேண்டிய பொறுப்பு இல்லாத மற்றும் ரூ. 15 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டும் இந்தியக் குடிமக்களின் கருதப்பட்ட வசிப்பிடத் தகுதியானது, வருமான வரிச் சட்டம், 1961-இன் பிரிவு 6(1A)-இன் கீழ் நிர்வகிக்கப்படும். ஏப்ரல் 1, 2026 அன்று அல்லது அதற்குப் பிறகு தொடங்கும் வரி ஆண்டுகளுக்கு வருமான வரிச் சட்டம், 2025-இன் பிரிவு 6(7)-இல் உள்ள அதற்குரிய கருதப்பட்ட வசிப்பிடத் தகுதி விதியே பொருந்தும். முந்தைய ஆண்டுகளுக்கான கருதப்பட்ட வசிப்பிடத் தகுதியை புதிய விதியின் கீழ் சோதிக்க முடியாது என்பதை இந்த ரத்து விதி உறுதி செய்கிறது.

13. ஒரு நபர் வருமான வரிச் சட்டம், 1961-இன் கீழ் ஒரு குறிப்பிட்ட ஆண்டிற்கு வசிப்பவராகக் கருதப்பட்டிருந்தால் அந்த வசிப்பிடத் தகுதியை வருமான வரிச் சட்டம், 2025-இன் கீழ் மீண்டும் மறுஆய்வு செய்ய முடியுமா?

இல்லை, வருமான வரிச் சட்டம், 1961-இன் கீழ் ஒரு வரி ஆண்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட வசிப்பிடத் தகுதியை அந்தச் சட்டத்தின் விதிகளின்படி மட்டுமே மீண்டும் மறுஆய்வு செய்ய முடியும்.

14. வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவுகள் 115D, 115E மற்றும் 115F-ல் உள்ள NRI-களுக்கான சலுகை வரி முறைகள் தொடர்பான விதிகளில் வருமான வரிச் சட்டம், 2025-ன் கீழ் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?

இல்லை. NRI-க்கான சிறப்பு வரி முறையின் முக்கிய அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை.
வருமான வரிச் சட்டம், 1961-ன் கீழ்:
• பிரிவு 115D, ஒரு வெளிநாடு வாழ் இந்தியரின் (NRI) முதலீட்டு வருமானத்தைக் கணக்கிடும்போது எந்தவொரு செலவு அல்லது படிகளுக்கான பிடித்தத்தையும் அனுமதிக்கவில்லை. மேலும், மொத்த வருமானத்தில் இத்தகைய முதலீட்டு வருமானம் மட்டுமே உள்ளடங்கியிருந்தால், அத்தியாயம் VI-A-ன் கீழ் கிடைக்கும் வரிப் பிடித்தங்களையும் இது கட்டுப்படுத்தியது.
• பிரிவு 115E முதலீட்டு வருமானத்திற்கு 20% சலுகை வரி விகிதத்தையும் சொத்துப் பரிமாற்றம் செய்யப்பட்ட தேதியின் அடிப்படையில் நீண்ட கால மூலதன ஆதாயங்களுக்கு 10% / 12.5% சலுகை வரி விகிதத்தையும் வழங்கியது.
• பிரிவு 115F, அந்நியச் செலாவணிச் சொத்துகளைப் பரிமாற்றம் செய்வதன்மூலம் கிடைத்த நிகரத் தொகையை, ஆறு மாதங்களுக்குள் குறிப்பிட்ட சில சொத்துகளில் மீண்டும் முதலீடு செய்யும்போது, மூலதன ஆதாயங்களுக்கு விலக்கு அளித்தது. இது விகிதாசார விலக்கு சூத்திரம் மற்றும் மூன்று ஆண்டு கால முதலீட்டு முடக்கத்திற்கு உட்பட்டது. மேலும், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பே அந்தச் சொத்து மாற்றப்பட்டால், அளிக்கப்பட்ட விலக்கைத் திரும்பப் பெறும் விதியும் இதில் இருந்தது.
 
வருமான வரிச் சட்டம், 2025-இன் தொடர்புடைய பிரிவுகளான 213, 214 மற்றும் 215 ஆகியவை இந்த விதிகளை அப்படியே மீண்டும் கொண்டு வருகின்றன. எனவே, செலவு பிடித்தங்கள் மீதான கட்டுப்பாடு, சலுகை வரி முறை, மீண்டும் முதலீடு செய்வதற்கான விலக்கு (சூத்திரம் A = B × C / D உட்பட), முதலீட்டு முடக்கம் மற்றும் விலக்கைத் திரும்பப் பெறும் வழிமுறை ஆகியவை புதிய சட்டத்தின் கீழ் எந்தவிதமான பெரிய மாற்றமும் இன்றி அப்படியே தக்கவைக்கப்பட்டுள்ளன.

15. 1961 ஆம் ஆண்டு சட்டத்தின் பிரிவு 115G-இன் கீழ், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான (NRIs) வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதிலிருந்து வழங்கப்பட்ட விலக்கு, 2025 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்திலும் தொடரப்பட்டுள்ளதா?

ஆம். 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 115G-இன் படி, ஒரு வெளிநாடு வாழ் இந்தியரின் (NRI) மொத்த வருமானம் என்பது முதலீட்டு வருமானம் அல்லது நீண்ட கால மூலதன ஆதாயம் அல்லது இவை இரண்டையும் மட்டுமே கொண்டு, அதற்கான வரி மூலத்திலேயே பிடிக்கப்பட்டிருந்தால் (TDS), அவர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு பெற்றிருந்தார். 2025 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 216, வரி இணக்கத்தை எளிமையாக்கும் இதே அணுகுமுறையைத் தொடர்ந்து, அதே போன்ற விதிகளுடன் இந்த நிவாரணத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. குறிப்பிட்ட வருமானப் பிரிவுகள் மற்றும் முறையான வரி மூலப்பிறப்பிலேயே பிடித்தம் செய்யப்படுதல் (TDS) ஆகிய நிபந்தனைகள் இதிலும் மாறாமல் அப்படியே தொடர்கின்றன.

16. பழைய வருமான வரிச் சட்டம், 1961-இன் பிரிவு 115H-இன் கீழ், ஒரு நபர் வசிப்பவராக மாறிய பிறகும் தொடர்ந்து சலுகைகளைப் பெறும் அம்சம், வருமான வரிச் சட்டம், 2025-இல் பாதுகாக்கப்பட்டுள்ளதா?

வருமான வரிச் சட்டம், 1961-இன் பிரிவு 115H, வசிப்பவராக மாறிய ஒரு NRI, ஓர் அறிவிப்பைச் சமர்ப்பிப்பதன் மூலம் குறிப்பிட்ட சில அந்நியச் செலாவணி சொத்துக்கள் (பங்குகளைத் தவிர்த்து) மீதான சலுகை வரி முறையைத் தொடர்ந்து அனுபவிக்க அனுமதித்தது. வருமான வரிச் சட்டம், 2025-இன் பிரிவு 217, இந்தத் தொடர் சலுகையைப் பாதுகாக்கிறது. வரிக் கணக்குத் தாக்கல் செய்யும்போது அதனுடன் அறிவிப்பைச் சமர்ப்பிக்க வேண்டிய தேவை, மற்றும் அந்தச் சொத்துப் பரிமாற்றம் செய்யப்படும் அல்லது உருமாற்றமடையும் வரை சலுகை தொடரும் என்ற நிபந்தனைகள் மாறாமல் அப்படியே உள்ளன. இதன்படி, சலுகைகளின் தொடர்ச்சி திரும்பப் பெறப்படவில்லை.

17. வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 115-I-ன் கீழ், NRI ஒருவர் சிறப்புச் சலுகை வரி முறையிலிருந்து விலகி, சாதாரண வரி விதிகளின்படி வரி செலுத்தத் தேர்வு செய்யும் முறை, வருமான வரிச் சட்டம், 2025-லும் தக்கவைக்கப்பட்டுள்ளதா?

வருமான வரிச் சட்டம், 1961-இன் பிரிவு 115-I, ஒரு NRI எந்தவொரு மதிப்பீட்டு ஆண்டிலும் சிறப்புச் சலுகை வரி முறையிலிருந்து விலகி அதற்குப் பதிலாகச் சாதாரண விதிகளின் கீழ் வரி விதிக்கப்பட வேண்டும் என்று தேர்வு செய்ய அனுமதித்தது. வருமான வரிச் சட்டம், 2025-உம் இந்தத் தேர்வு முறையைத் தக்கவைத்துள்ளது; வரிவிதிப்புக்குரியவர்  தனது வரிக் கணக்கில் இந்தச் சிறப்பு விதிகள் தனக்குப் பொருந்தாது என்று அறிவிப்புச் செய்ய இது அனுமதிக்கிறது. இத்தகைய அறிவிப்பின் பேரில், வரிவிதிப்பானது இச்சட்டத்தின் பொதுவான விதிகளின் கீழ் அமையும். எனவே, இந்தச் சிறப்பு வரி முறையின் விருப்பத்தேர்வுத் தன்மையானது மாறாமல் அப்படியே நீடிக்கிறது.

18. ஒரு NRI-இன், வருமான வரிச் சட்டம், 1961-ன் (பழைய சட்டம்) பிரிவு 115-I-ன் கீழ் சலுகை வரி முறையிலிருந்து விலகும் தேர்வை மேற்கொண்டிருந்தால், அந்தத் தேர்வு சட்டம் ரத்துச் செய்யப்பட்ட பிறகும் செல்லுபடியாகுமா?

ஆம், ரத்து மற்றும் சேமிப்பு விதி தொடர்புடைய மதிப்பீட்டு ஆண்டிற்காக வருமான வரிச் சட்டம் 1961-ன் கீழ் முறையாக மேற்கொள்ளப்பட்ட தேர்வுகளைப் பாதுகாக்கிறது. பிரிவு 115-I-ன் கீழ் வழங்கப்பட்ட தேர்வு குறிப்பிட்ட அந்த ஆண்டிற்கு மட்டுமே உரியது என்பதால், சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகும் அந்த குறிப்பிட்ட ஆண்டிற்கான அதன் தாக்கம் தொடரும். வருமான வரிச் சட்டம் 2025-ன் கீழ் வரும் வரி ஆண்டுகளுக்கு, அதற்குரிய விலகல் விதிகள் வருங்கால அடிப்படையில் பொருந்தும். சட்டம் ரத்து செய்யப்பட்டதால், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஒரு தேர்வு பின்னோக்கிய விளைவுடன் செல்லாததாகிவிடாது. எனவே, ஒவ்வொரு வரி ஆண்டையும் அந்த ஆண்டிற்குப் பொருந்தும் சட்டம் மற்றும் வரி விதிப்பிற்குரியவர் தேர்ந்தெடுத்த விருப்பத்தின் அடிப்படையில் தனித்தனியாகவே ஆய்வு செய்ய வேண்டும்.

19. ஒரு NRI, வருமான வரிச் சட்டம் 1961-ன் பிரிவு 115F-ன் கீழ் வரி விலக்குக் கோரியிருந்தார். அவர் 01.04.2026-க்குப் பிறகு (அதாவது, வருமான வரிச் சட்டம் 2025 நடைமுறைக்கு வந்த பிறகு) ஆனால் மூன்று ஆண்டு முடக்கக் காலத்திற்குள் அந்தப் புதிய சொத்தைப் பரிமாற்றம் செய்தால் அதற்கு எந்தச் சட்டம் பொருந்தும்?

புதிய சொத்து 01.04.2026-க்குப் பிறகு, ஆனால் மூன்று ஆண்டு முடக்கக் காலத்திற்குள் பரிமாற்றம் செய்யப்பட்டால், வருமான வரிச் சட்டம் 1961-ன் பிரிவு 115F(2)-ன் கீழ் திரும்பப் பெறும் பொறுப்பு எழும். ஏனெனில், அந்த அசல் வரி விலக்கை வழங்கியதே 1961-ம் ஆண்டுச் சட்டப்பிரிவுதான். வருமான வரிச் சட்டம் 2025-ன் ரத்து மற்றும் சேமிப்பு விதி, அந்த வரி விலக்கிற்கான பொறுப்பைப் பாதுகாப்பதோடு, அதன் உரிமைகளையும் நிபந்தனைகளையும் 1961-ம் ஆண்டுச் சட்டத்தின் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறது. எனினும், வரிவிதிப்பிற்குரிய ஆண்டானது, அந்தப் புதிய சொத்துப் பரிமாற்றம் செய்யப்படும் வரி ஆண்டாகவே இருக்கும். இது 01.04.2026-க்குப் பிறகு நிகழும்போது, அந்தப் பரிமாற்றம் 2025-ம் ஆண்டுச் சட்டத்தின் கீழ் வரும் மற்றும் அந்த ஆண்டிற்கான வரி மதிப்பீடு அச்சட்டத்தின் விதிகளின்படியே மேற்கொள்ளப்படும்.

20. ஒரு NRI, இந்திய வசிப்பாளர் ஆன பிறகும் தொடர்ந்து சலுகை வரி முறையைப் பெறுவதற்காக, வருமான வரிச் சட்டம் 1961-ன் பிரிவு 115H-ன் கீழ் சமர்ப்பித்த அறிவிப்பு வருமான வரிச் சட்டம் 2025-ன் கீழும் செல்லுபடியாகுமா?

வருமான வரிச் சட்டம், 1961-இன் பிரிவு 115H-இன் கீழ், ஒரு NRI தான் இந்திய வசிப்பாளராக மாறிய பிறகும் சலுகை வரி விகிதங்களைத் தொடர்வதற்காகத் தாக்கல் செய்திருந்த அறிவிப்பு, வருமான வரிச் சட்டம், 2025-இன் பிரிவு 536(2)(f)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, புதிய சட்டத்தின் நோக்கங்களுக்காகவும் ஒரு செல்லுபடியாகும் அறிவிப்பாகவே கருதப்படும்.

21. பழைய வருமான வரிச் சட்டம் நீக்கப்பட்ட பிறகு, பிரிவு 115C முதல் 115I வரையிலான பிரிவுகளை உள்ளடக்கிய நிலுவையில் உள்ள மதிப்பீடுகள் அல்லது மறுமதிப்பீடுகள் எவ்வாறு கருதப்படுகின்றன?

வருமான வரிச் சட்டம், 1961-இன் கீழ் நிர்வகிக்கப்படும் வரி ஆண்டுகள் தொடர்பான மதிப்பீடுகள், சேமிப்பு விதியின் அடிப்படையில் அதே சட்டத்தின் கீழ் தொடரும். சட்டத்தை நீக்குவது, பழைய சட்டத்தின் விதிகளின் கீழ் ஏற்கனவே முடிக்கப்பட்ட நடவடிக்கைகள் அல்லது தற்போது நடந்து வரும் மறுமதிப்பீட்டு நடவடிக்கைகளைச் செல்லாததாக்காது. எனவே, சலுகை வரி விகிதங்கள், பிரிவு 115D-இன் கீழ் பிடித்தம் மறுப்பு அல்லது பிரிவு 115F-இன் கீழ் வரி விலக்கு தொடர்பான சர்ச்சைகள் அந்தந்த ஆண்டுகளுக்கான பழைய சட்டத்தின் கீழ் மட்டுமே தீர்க்கப்படும். புதிய சட்டம், 1 ஏப்ரல் 2026 அல்லது அதற்குப் பிறகு தொடங்கும் வரி ஆண்டுகளுக்கு மட்டுமே முன்னோக்கிய விளைவுடன் பொருந்தும்.

22. பழைய சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட சொத்துகளுக்கு, "அந்நிய செலாவணி சொத்து" என்ற வரையறையை இந்தச் சட்ட நீக்கம் பாதிக்குமா?

இல்லை, வருமான வரிச் சட்டம், 1961-இன் பிரிவு 115C-இன் கீழ் "அந்நிய செலாவணி சொத்துகள்" ஆகக் கையகப்படுத்தப்பட்ட சொத்துகள், முந்தைய ஆண்டுகளுக்கான வரி விதிப்பு நோக்கங்களுக்காகத் தங்களின் அதே தன்மையைத் தக்கவைத்துக் கொள்கின்றன. வருமான வரிச் சட்டம், 2025, பிரிவு 212-இன் கீழ் இதே போன்ற வரையறைகளைக் கொண்டுள்ளதால், வகைப்பாட்டில் எந்தவொரு தடையோ அல்லது இடைவெளியோ இல்லை. பழைய சட்டத்தின் கீழ் தீர்மானிக்கப்பட்ட சொத்துகளின் தன்மை மற்றும் வரி விதிப்பு முறை ஆகியவை செல்லுபடியாகும் என்பதைச் சேமிப்பு விதி உறுதி செய்கிறது.

23.வருமான வரிச் சட்டம், 1961-இன் பிரிவு 10(4)(ii)-இன் கீழ் NRE கணக்கில் ஈட்டப்படும் வட்டிக்குக் கிடைக்கும் வரி விலக்கு, வருமான வரிச் சட்டம், 2025-இல் தக்கவைக்கப்பட்டுள்ளதா?

வருமான வரிச் சட்டம், 1961-இன் பிரிவு 10(4)(ii), FEMA சட்டத்தின்படி பராமரிக்கப்படும் குடியுரிமை இல்லாதவர்(வெளிநாடு)  கணக்கிலிருந்து(NRE) ஒரு தனிநபர் ஈட்டும் வட்டிக்கு வரி விலக்கு அளித்தது. அதற்கு, அந்த நபர் FEMA-வின் கீழ் இந்தியாவிற்கு வெளியே வசிப்பவர் என்ற தகுதியைக் கொண்டிருக்க வேண்டும் அல்லது RBI-யால் அத்தகைய கணக்கைப் பராமரிக்க அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். வருமான வரிச் சட்டம், 2025-இல், இந்த வரி விலக்கு அட்டவணை IV-இல் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அடிப்படை நிபந்தனைகள் மாறாமல் அப்படியே உள்ளன — அதாவது, இதற்கான தகுதி தொடர்ந்து FEMA-வின் கீழ் இந்தியாவிற்கு வெளியே வசிப்பவர் என்ற தகுதி நிலை மற்றும் RBI-யின் அனுமதி ஆகியவற்றின் அடிப்படையிலேயே அமைகிறது. இந்த வரி விலக்கு எவ்விதத்திலும் திரும்பப் பெறப்படவில்லை அல்லது குறைக்கப்படவில்லை.

24. வருமான வரிச் சட்டம், 2025, FEMA வசிப்பிடத் தகுதிக்கும், பழைய சட்டத்தின் பிரிவு 10(4)(ii)-இன் கீழ் வழங்கப்பட்ட வருமான வரி விலக்கிற்கும் இடையிலான தொடர்பை மாற்றுகிறதா?

வருமான வரிச் சட்டம், 1961-இன் பிரிவு 10(4)(ii)-இன் கீழ் வழங்கப்பட்ட வரி விலக்கானது, வருமான வரிச் சட்டத்தின் கீழ் உள்ள வரி வசிப்பிடத் தகுதியைவிட, FEMA-வின் "இந்தியாவிற்கு வெளியே வசிப்பவர்" என்ற வரையறையை அடிப்படையாகக் கொண்டது. வருமான வரிச் சட்டம், 2025 இந்த வேறுபாட்டைத் தொடர்ந்து அப்படியே பராமரிக்கிறது.

25. வருமான வரிச் சட்டம், 1961-இன் பிரிவு 48-இன் முதல் நிபந்தனையின் கீழ், வெளிநாடு வாழ் இந்தியர்கள் பங்குகள் அல்லது கடன் பத்திரங்கள் மீதான மூலதன ஆதாயத்தை அசல் அந்நியச் செலாவணியிலேயே கணக்கிட்டு, மீண்டும் மாற்றும் வழிமுறையை வருமான வரிச் சட்டம், 2025 தக்கவைத்துள்ளதா?

வருமான வரிச் சட்டம், 1961-இன் பிரிவு 48-இன் முதல் நிபந்தனையின்கீழ், ஒரு இந்திய நிறுவனத்தின் பங்குகள் அல்லது கடன் பத்திரங்களைப் பரிமாற்றம் செய்வதன் மூலம் கிடைக்கும் மூலதன ஆதாயத்தைக் கணக்கிடும் வெளிநாடு வாழ் இந்தியர்கள், அந்த முதலீடு எந்த அந்நியச் செலாவணியில் செய்யப்பட்டதோ, அதே செலாவணியில் ஆதாயத்தைக் கணக்கிடவும், பின்னர் நிகர ஆதாயத்தை இந்தியச் செலாவணிக்கு மாற்றவும் அனுமதிக்கப்பட்டனர். இது அந்நியச் செலாவணி மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைச் சமன் செய்தது. வருமான வரிச் சட்டம், 2025-இன் பிரிவு 72, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக இந்த வழிமுறையைத் தொடர்ந்து தக்கவைத்துள்ளது.